புதன், 18 பிப்ரவரி, 2009

ஓர் இதயத்தின் ஊஞ்சலாட்டம்.....

போதிமரத்தடியில்
உச்சிப்பிள்ளையார்
தேடுகிறேன்!

ஆலமரத்தடியில்
ஆழ்ந்த அறிவைத்
தேடுகிறேன்!

---
கணிப்பொறியின் ஒளித்திரையில்
உன் கூந்தலின் ஒற்றை ரோஜா
தேடுகிறேன்!

விண்வெளியில் வேறொரு நிலவை
விரட்டி விரட்டித்
தேடுகிறேன்!

---
கருப்பு வெள்ளை
வானவில் காண்கிறேன்!

கலவை நிறத்தில்
நிலவை ரசிக்கிறேன்!

---
வெளிச்சக்கூட்டில் ஒளிந்து கொள்ள
ஓர் மறைவைத்
தேடுகிறேன்!

விதவை வானில் விடிய விடிய
வெளிச்சம்
தேடுகிறேன்!

---
உன் வீட்டு வாயில் திறக்கும் வேளையில்
செவ்வாயில்
ஜீவிக்கிறேன்!

கடவாயில் நீர் வடிய
கனவுலகில்
நான் வசிக்கிறேன்!

---
ஒரு காலில் ஆண் செருப்பும்
மறுகாலில் பெண் செருப்புமாய்
ஜோடி சேர்த்துப் பார்க்கிறேன்!

தொலைபேசி சிரிக்கும்போதெல்லாம்
தொடர்பில் நீ இல்லையென்றால்
தொலைந்து போகிறேன்!

---
என் கவிதைத் தொகுப்பிற்குள்
உன் கால் கொலுசின்
தடம் தேடுகிறேன்!

என் இளமை பூந்தோட்டத்தில்
உன் உருவத்தில்
மலர் தேடுகிறேன்!

---

பிறப்பின் மகிழ்ச்சிக்கும்
இறப்பின் இரங்கலுக்கும்
இடையில்
என் இனிய இளமைப் பருவத்தில்
ஏன் இந்த இதயத்தில்
ஊஞ்சலாட்டம் ?.....


காதலிக்கத் தொடங்கிவிட்டேனா ?????.....

----- மகி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக